Search This Blog

Friday, January 14, 2011

akkinik kunjonru kanden : Barathi

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்.
 அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்திடை வைத்தேன்
 வெந்து தணிந்ததக் காடு,
 தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
 தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!"



என்ன ஒரு பாட்டு! நெருப்பிலே, சிறு நெருப்பு - பெரு நெருப்பு என்றெல்லாம் வித்தியாசம் உண்டோ? இல்லை. நெருப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், எரிக்கும் சக்தி எல்லாம் ஒன்றுதான். இதைத்தான், "மூர்த்தி சிறிதாயினும், கீர்த்தி பெரிது" என்று சொல்வார்கள்.

பாரதியின் இந்த "புதுக் கவிதை" என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. இதை எந்தத் தருணத்தில் பாரதி பாடினான் என்று தெரியவில்லை. எதைச சொல்ல, இந்தப் பாடல் என்று தெரியாவிட்டாலும், எந்த ஒரு பெரும் சக்தி பற்றியும் இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆன்மீக சக்தியாக இருக்கட்டும். ஜன சக்தியாக இருக்கட்டும். சிறு பொறியாகக் கிளம்பினாலும், பெரும் சக்தியாக உருமாரி, தீமைகளைப் பொசுக்கும் வல்லமையோடு வெளிவருகின்றது. மகாபலிச் சக்கரவர்த்தியை அழிக்க வந்த வாமனனாயிருக்கட்டும்.


இடுப்பில் ஒரு அரை முழம் வேட்டியுடன் ஆங்கில சாம்ராஜ்ஜியத்தையே எதிர்த்துப் போராடிய காந்திஜியாயிருக்கட்டும்.



மகா பலியால், "இவன் சிறுவன்" என்று நினைத்து விட முடியவில்லை. சர்ச்சிலால், "இவர் நாகரீகமாய் உடுக்கக் கூடத் தெரியாத கோவணாண்டி" என்று விட்டுவிட முடியவில்லை. பெரும் சக்தியாய் மாறி, எதிர்த்தவர்களை அழித்துத்தான் விட்டது.

ஏன், இரண்டு வரிகளில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் குரள் சொல்லிவிடவில்லையா என்ன!



இந்தப் பாடலில், பொருள் பொதிந்த அத்தனை வரிகளையும் விடவும், எனக்கு மிகவும் பிடித்தது, இந்த  "தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!" தான்! என்ன ஒரு சந்தம்! என்ன ஒரு நயம்! என்ன ஒரு அழகு! அந்த சிறு நெருப்பு, அந்தத் தழல், அந்தப் பொந்திடை இருந்து புறப்பட்டு, "தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!" என்று நடனமிட்டு,  இருள் சூழ்ந்த அந்தக் காட்டினை முழுக்க எரிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றதே!

1 comment:

  1. பாரதி எதை பேசினாலும் அதில் நாட்டை பற்றிய சிந்தனை இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம் ..அவன் சொன்னது சுதந்திர வேட்கையில் சிறியவர் என்றும் பெரியவர் என்றும் எண்ணி வாட வேண்டாம் ..நெருப்பு எப்படி சிறிது பெரிது என்ற பாகுபாடு இல்லையோ அப்படி என்று விளக்கத்தான் இப்படி சொல்லி இருக்க வேண்டும்

    இன்றும் நம்மிடம் காற்றாக மழையாக வெயிலாக நின்று கொண்டு நம்மோடு வாழும் அவனையே கேக்கலாம்..மீசைகாரரே ..என்ன நினைத்து இப்படி சொன்னீர்கள்

    ReplyDelete