Search This Blog

Saturday, January 29, 2011

Tahmizhukkum AmuthenRu pEr : தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

என்ன ஒரு பாடல் இது!

பாரதிதாசன் பாடிய பாடல் இது. சுசீலாவின் இனிய குரலாலே மிகப் பிரபலமான இந்தப் பாடல், மிக அழகாகத் தமிழின் பெருமையை, இனிமையை விளக்குகின்றது. அவரது இன்ன பிற பாடல்களையும் காண, இங்கு நோக்கவும் : http://www.puducherry.com/bharathidasan/




இந்த ஏட்டின் பெயரே கூட, இந்தப் பாடலிலிருந்து பிறந்ததுதான். "தமிழ்", "தமிழ்" என்று சொல்லிக்கொண்டே இருந்தால், "அமிழ்து" "அமிழ்து" என்றுதான் கேட்கும். 


மிக நிச்சயமாக, தமிழ் மொழிபோல், இனிதாவதெங்கும் காணோம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை கவிதைகள். எந்தனை அழகிய பாடல்கள். எத்தனைக் கதைகள். எத்தனை நாடகங்கள். எவ்வளவு அழகான மொழி. 


கம்பனும், பாரதியும், அவனது தாசனும், இளங்கோவும், இன்ன பிற கவிஞர்களும், கதாசிரியர்களும் வந்து, இந்த மொழியிலே காவியங்களும், காப்பியங்களும் செய்து நமக்கு பேருதவி புரிந்து இருக்கிறார்கள். 


என்ன இல்லை இந்த மொழியிலே! வாழ தமிழ் மொழி. வாழிய எம் தமிழ் நாடு.



Friday, January 14, 2011

akkinik kunjonru kanden : Barathi

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்.
 அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்திடை வைத்தேன்
 வெந்து தணிந்ததக் காடு,
 தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
 தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!"



என்ன ஒரு பாட்டு! நெருப்பிலே, சிறு நெருப்பு - பெரு நெருப்பு என்றெல்லாம் வித்தியாசம் உண்டோ? இல்லை. நெருப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், எரிக்கும் சக்தி எல்லாம் ஒன்றுதான். இதைத்தான், "மூர்த்தி சிறிதாயினும், கீர்த்தி பெரிது" என்று சொல்வார்கள்.

பாரதியின் இந்த "புதுக் கவிதை" என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. இதை எந்தத் தருணத்தில் பாரதி பாடினான் என்று தெரியவில்லை. எதைச சொல்ல, இந்தப் பாடல் என்று தெரியாவிட்டாலும், எந்த ஒரு பெரும் சக்தி பற்றியும் இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆன்மீக சக்தியாக இருக்கட்டும். ஜன சக்தியாக இருக்கட்டும். சிறு பொறியாகக் கிளம்பினாலும், பெரும் சக்தியாக உருமாரி, தீமைகளைப் பொசுக்கும் வல்லமையோடு வெளிவருகின்றது. மகாபலிச் சக்கரவர்த்தியை அழிக்க வந்த வாமனனாயிருக்கட்டும்.


இடுப்பில் ஒரு அரை முழம் வேட்டியுடன் ஆங்கில சாம்ராஜ்ஜியத்தையே எதிர்த்துப் போராடிய காந்திஜியாயிருக்கட்டும்.



மகா பலியால், "இவன் சிறுவன்" என்று நினைத்து விட முடியவில்லை. சர்ச்சிலால், "இவர் நாகரீகமாய் உடுக்கக் கூடத் தெரியாத கோவணாண்டி" என்று விட்டுவிட முடியவில்லை. பெரும் சக்தியாய் மாறி, எதிர்த்தவர்களை அழித்துத்தான் விட்டது.

ஏன், இரண்டு வரிகளில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் குரள் சொல்லிவிடவில்லையா என்ன!



இந்தப் பாடலில், பொருள் பொதிந்த அத்தனை வரிகளையும் விடவும், எனக்கு மிகவும் பிடித்தது, இந்த  "தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!" தான்! என்ன ஒரு சந்தம்! என்ன ஒரு நயம்! என்ன ஒரு அழகு! அந்த சிறு நெருப்பு, அந்தத் தழல், அந்தப் பொந்திடை இருந்து புறப்பட்டு, "தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!" என்று நடனமிட்டு,  இருள் சூழ்ந்த அந்தக் காட்டினை முழுக்க எரிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றதே!

Saturday, January 8, 2011

Kamban : "Ulagam Yavaiyum" : "உலகம் யாவையும்"

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 
 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
 அன்னவர்க்கே சரண் நாங்களே"

கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம் சொல்லப் புகுந்த காவியத்திலே, முதல் பாடலிலே, கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கும் அந்தப் பாடலிலே, கடவுள் பெயரே இல்லை!


இது போன்று வேறு எந்தக் காவியத்திலும் வந்ததாகத் தெரியவில்லை. எல்லாக் காவியங்களிலும், முதலிலே, ஒரு விநாயகர் துதி இருக்கும். இல்லையென்றால், அந்த நூல் பாடப்பெறும் தெய்வத்தின் பாடல் இருக்கும். ஆனால், இங்கே, இரண்டும் இல்லை. "இந்த உலகத்தினைப் படைத்தும், காத்தும், அழித்தும், இப்படி விளையாட்டாய் அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் அந்த ஒருவரே, எங்கள் தலைவர். அவரது தாளினைகளையே,  நாங்கள் சரணடைகிறோம்" என்று தொடங்குகிறான் கம்பநாடன்.

எந்த ஒரு மதத்தினைச் சார்ந்தவரும், தங்களது தெய்வமே, படைப்பு, காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் புரிகின்றது என்று நினைப்பர். கம்பநாடன், எந்த ஒரு மதத்தினருக்கும் இணங்க, எந்த ஒரு தெய்வத்திற்கும் ஏற்றவாறு, இந்த காவியத்தினை ஆக்க வந்தானோ? அதனால்தான், எந்த தெய்வத்தினையும் சாராமல், அதே சமயம், எல்லா தெய்வத்திற்கும் பொருந்தும் விதத்தில், இந்தப் பாடல் படைத்தானோ?

என்ன  அழகு இந்தப் பாடல்! தமிழ் எனும் அமிழ்து அருந்தத் தொடங்கும் பாடலே, அமிழ்தினும் இனிய பாடலை அமைந்தது அந்த எல்லாமாய் நின்று, அலகிலா விளையாட்டாய் அனைத்தையும் நடத்தி வரும் அந்த தெய்வத்தின் அருளேயன்றி, வேறொன்றும் இல்லை!