Search This Blog

Saturday, February 2, 2013

Summa iru, sollara' : Arunagirinathar Thiruppugazh

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
"சும்மா இரு, சொல்லற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!


இந்தப் பாடலின் அழகு யாரும் சொல்லி அறியவேண்டியது இல்லை!

சிவபதவி அடைந்துவிட்ட எனது பெரிய தகப்பனார் திரு. சுந்தரேஸ்வரன், (பிக்ஷாண்டார்கோயில், திருச்சி), இந்தப் பாடலைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்!

குறவர் கூட்டத்திற்குத் தலைவனான 'செம்மானின்' மகளான வள்ளியைத் திருடி மணம் கொண்ட அந்த முருகப் பெருமான், பிறப்பும் இறப்பும் இல்லா அந்தப் பெருமான், எனக்கு உபதேசம் செய்தான். "சும்மா இரு. சொல் அற" என்றான். அந்த மாபொருள் ஒன்றும் விளங்கவில்லையே!" என்று பேசுகிறார் அருணகிரினாதர்.






'அம்மா பொருள் ஒன்றும்" என்ற தொடர் மிக அழகு! 'அம் மாபொருள்' என்று கொள்வதா? இல்லை, 'அம்மா! பொருள் ஒன்றும்' என்று கொள்வதா? தமிழிலே, இயலாமையைக் குறிக்கும்போதும், வியப்பினைக் குறிக்கும்போதும், 'அம்மா' என்ற தொடரை உபயோகப்படுத்துவது ஒரு மரபு. அந்த மரபினை ஒட்டி இங்கே 'அம்மா' என்று விளிக்கப்பட்டதா? இல்லை, 'அம் மா பொருள்' என்று வியப்பினால் சுட்டப்பட்டதா?

இரண்டுமே இங்கே பொருந்தும் என்றே தோன்றுகின்றது!

'அந்த மா பொருள் ஒன்றும், அம்மா! விளங்கவில்லயே' என்றுதான் அருணகிரியார் சொல்லியிருப்பார் என்று தோன்றுகின்றது!

'சொல் அற' என்ற பதமும் மிக வியப்புதான். வெறும் பேச்சு இன்றி இருத்தல் இல்லை இது. வாய்ப்பேச்சை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தில் எழும் எண்ணங்களையும் சேர்த்தே குறிக்கிறது. மனதிலே எண்ணங்கள் தோன்றினால், சொல் எழும். சொல் அற்றுப்போவது என்றால், மனதிலே எண்ணங்களும் இல்லாமல் போவதுதான்!

இப்படி, சொல் இன்றி, சொல் எழும் வித்தான் எண்ணங்கள் இன்றி, சும்மா இருத்தல் என்பது மிகவும் முயற்சி எடுத்து அல்லவா செய்யப்பட வேண்டியது! 'சும்மா இருத்தலுக்கு' எத்தனை முயற்சி வேண்டியிருக்கிறது! எத்தனை சாதனை செய்ய வேண்டியிருக்கிறது!

இத்தனைப் பொருளும் அடங்கியிருப்பதால்தானோ என்னவோ அருணகிரினாதர், 'அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே' என்று சொல்லி விட்டார்!

அற்புதமான பாடல் வரிகள்!!

Pallandu, Pallandu pallayiraththaanu palakodi noorayiram": "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு"

பெரியாழ்வார் திருமொழி


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட தோள் மணிவண்ணா ! உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!






கடவுளை வணங்கி தாம் கோரி வந்ததைப் பெறுவது - அது பொருள் வேண்டி வந்தாலும் சரி அல்லது அருள் வேண்டி வந்தாலும் சரி - வேண்டி வந்ததைப் பெறுவதே பக்தி என்று இருந்ததை மாற்றி, 'ஆண்டவனே! நான் நன்றாக இருக்க வேண்டும்'; 'எனது சுற்றாம் நன்றாக இருக்க வேண்டும்'; 'எனது நகரம் , நாடு நன்றாக இருக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை எல்லாம் தாண்டி, 'அப்பா! நீ நன்றாக இருக்க வேண்டும்' என்று அவனிடமே வேண்டிக் கொள்வது ஒரு புதிய கோணம். ஒரு அழகிய பார்வை. பக்தியிலே இது முற்றிய பக்தி.

அவனே எல்லாம் என்றால், அவன் நன்றாக இருந்து விட்டால் அனைவரும் நன்றாக இருப்போம் அல்லவா?

இத்தனை உலகங்களையும் படைத்தும், காத்தும் வருபவன் அவன். அனத்து உலகங்களும் இருப்பதும் அவனுள்ளேதான். அவன் பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு செவ்வனே இருந்த்துவிட்டால், அவனுள்ளே இருக்கும் அனத்தும் உலகங்களும் செவ்வனே இருந்துவிடும் அல்லவா!



 


இப்படி, யார் இந்த வாழ்க்கைக்கெல்லாம் மூல காரணமோ, அவனை வாழ்த்தி, அவன் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று அவனிடமே கேட்பதென்பது நிச்சயமாகப் புதுமையான ஒன்றுதான்!

அதனால்தான், இவரைப் 'பெரிய ஆழ்வார்' என்று தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடுகிறது!!