Search This Blog

Sunday, February 13, 2011

"kaththiyinri Raththaminri Yuththmonru Varugudhu" : Namakkal Kavignar

"கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது,
 சத்தியத்தின் நித்தியத்தை, நம்பும் யாரும் சேருவீர்"

குதித்துக் கிளம்பி சத்தியாக்ராஹத்தில் சேர வைக்கும் பாட்டு. என்ன ஒரு பாட்டு! ராமலிங்கம் பிள்ளையின் இந்தப் பாடலை ஸத்தியாக்ரஹ நேரத்தில் பாடாதவர்களே இருந்திருக்க முடியாது.



காந்திஜியின் தத்துவத்தை, மிக அழகாக, மிகத் தெளிவாக எடுத்துக் காட்டிய பாடல் இது. சிறுவர் சிறுமியரும் கூட மிக எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்த பாடல் இது.



"நாமக்கல் கவிஞர்" என்று போற்றப்பட்ட அந்த அற்புதக் கவிஞரின் அதி அற்புதமான பாடல். 

யுத்தம் என்றால் அது கத்தியும், வாளும், வேலும் கொண்டதாகத்தான் இருக்கும் என்பதுதான் நமது நம்பிக்கை. அப்படித்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கோ, ஒரு யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த யுத்தத்தில், கத்தியும் இல்லை.  இரத்தமும் இல்லை. இது, சத்தியத்தினை, நம்பும் மக்கள் நடத்தும் யுத்தம். அந்த சத்தியத்தின் மகிமையை, அந்த சத்தியம் என்பது என்றும் அழியாமல் இருக்கும் என்பதனை நம்பும் மக்கள் நடத்தும் யுத்தம். அந்த உத்தமர் காந்தி மகான் நடத்தும் யுத்தம்.



இதனை நம்பிச் சேருங்கள் என்று அரை கூவல் விடுக்கும்  பாடல்.

இராமலிங்கம் பிள்ளையின் பலப்பல பாடல்களுள், என்னைக் கவர்ந்த மிக அழகிய பாடல் இது.

Sunday, February 6, 2011

Yaathum Oore, Yaavarum kELir" : Kaniyan Poongunranaar

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" : கணியன் பூங்குன்றனார்

இந்த ஒரு வார்த்தை சொல்ல என்ன ஒரு மனித நேயம் வேண்டும்! அனைத்து உலகும் எனது உறவு. அனைத்து மக்களும் எனது உறவு. எந்த ஊரும் எனது ஊரே என்பது எவ்வளவு உயர்ந்த சிந்தனை!

இந்த மாதிரி ஒரு சிந்தனை, வார்த்தை, சொல் வர வேண்டும் என்றால், அந்த மனிதர், அந்த புலவர், எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்! அவர் வாழ்ந்த சூழலும், சுற்றமும், ஊரும், நாடும், எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!

எனக்கென்று ஒரு எல்லை என்பது இல்லை என்று சொல்வதற்கு, மிகப் பெரிய சிந்தனை, மிகப் பரந்த மனப்பாங்கு வேண்டும். 'எனது நாடு, எனது ஊர், எனது வீடு' என்று இருப்பார் மத்தியில், 'எல்லாரும் என் உறவினரே' என்று சொல்வது மிகப் பெரிய மாற்றம் அல்லவா!

'எல்லோரும் என் உறவு' என்று சொல்லும்போது, என்னிடம் இருப்பதை, அனைவரிடமும் பகிர்ந்து அளிப்பதற்கும், அவர்கள் அளிப்பதை மகிழ்ச்சியோடு ஏற்கவும் மனம் வேண்டும். 

இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என் மாநிலம், என் மாவட்டம், என் வட்டம் என்று ஒரு சிறிய குறுகிய எல்லைக்குள் நம்மை நாமே கட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

'இது எனது, இதுமட்டுமே எனது, உனது எனக்கு வேண்டாம்' என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பதே, எனக்குத் தெரிந்து, முதன் முதலில் 'globalization' பற்றி வந்த சிந்தனை. அந்த சிந்தனையின் 'logical end' தான், இப்போது நாம் பார்க்கும் 'globalization'.  

வர்த்தக எண்ணத்தில் மட்டுமல்லாது, மனித நேயத்தின் அடிப்படையிலும், நமது சிந்தனையில், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற சிந்தனை மலரட்டும்.