Search This Blog

Saturday, March 5, 2011

"Kadai viriththen Kolvarillai" : Ramalinga vallalaar


" கடை விரித்தேன், கொள்வாரில்லை"...ராமலிங்க வள்ளலார்

இருப்பதிலேயே மிகப் பெரும் சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப் படுத்திப் பார்ப்பதுதான். அதே போல, மிகப் பெரும் துக்கம், மற்றவர்களுக்கு ஏதும் செய்ய முடியாமல் போவதுதான். அதிலும், நம்மால் முடிந்தும், மற்றவர்கள், தமது அறியாமையால், நமது யோசைனைகலையோ, நமது அறிவுரைகளையோ, ஏற்காமல் போகும்போது ஏற்படும் துக்கம் பெரிது. அவ்வாறு, அவர்கள் ஏற்காமல் போய், அவர்கள் துன்பப்படும்போது, நாம் படும் துக்கம் மிக மிகப் பெரிது.

அந்த துக்கத்தைத்தான், வள்ளலார், இங்கே படுகிறார். 

"என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்தேன். நல்லறிவுரை கூற வந்தேன். அதனைக் கேளாமல், இந்த மனிதர்கள், தங்கள் போக்கிலேயே போகின்றாரே" என்ற வருத்தம் வள்ளலாருக்கு நிரம்ப உண்டு. 
'திருவருட்பா' எழுதிய வள்ளலார், அதனை  மக்கள் மத்தியிலே பரப்ப முடியாமல் தவித்தார். "மருட்பா" என்று திருவருட்பாவிற்கு எதிராக மறுப்பு தோன்றியது. அதனை சமாளித்த வள்ளலார், மக்கள் மத்தியிலே நல்ல குணங்களும், சகிப்புத்தன்மையும் வளர பாடுபட்டார். 

இவ்வளவு செய்தும்கூட, மக்கள் குணம் மாறாமல், அவர்கள் தங்கள் மனம் போன போக்கிலேயே இருப்பது கண்டு மனம் வெதும்பினார். 

இவ்வளவு சொல்லியும், இவ்வளவு செய்தும்கூட மக்கள் இப்படி இருக்கின்றார்களே என்ற வருத்தமே, வள்ளலார், இப்படி பாடும்படி செய்தது. 

ஒரு ஞானியும் மனம் வெதும்பக்கூடும், மக்கள் இப்படி இருக்கிறார்களே என்று வருந்தி மனம் வருந்தக் கூடும் என்பதை மிக அழகாக படம் பிடிக்கும் வரிகள் இவை.

Sunday, February 13, 2011

"kaththiyinri Raththaminri Yuththmonru Varugudhu" : Namakkal Kavignar

"கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது,
 சத்தியத்தின் நித்தியத்தை, நம்பும் யாரும் சேருவீர்"

குதித்துக் கிளம்பி சத்தியாக்ராஹத்தில் சேர வைக்கும் பாட்டு. என்ன ஒரு பாட்டு! ராமலிங்கம் பிள்ளையின் இந்தப் பாடலை ஸத்தியாக்ரஹ நேரத்தில் பாடாதவர்களே இருந்திருக்க முடியாது.



காந்திஜியின் தத்துவத்தை, மிக அழகாக, மிகத் தெளிவாக எடுத்துக் காட்டிய பாடல் இது. சிறுவர் சிறுமியரும் கூட மிக எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்த பாடல் இது.



"நாமக்கல் கவிஞர்" என்று போற்றப்பட்ட அந்த அற்புதக் கவிஞரின் அதி அற்புதமான பாடல். 

யுத்தம் என்றால் அது கத்தியும், வாளும், வேலும் கொண்டதாகத்தான் இருக்கும் என்பதுதான் நமது நம்பிக்கை. அப்படித்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கோ, ஒரு யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த யுத்தத்தில், கத்தியும் இல்லை.  இரத்தமும் இல்லை. இது, சத்தியத்தினை, நம்பும் மக்கள் நடத்தும் யுத்தம். அந்த சத்தியத்தின் மகிமையை, அந்த சத்தியம் என்பது என்றும் அழியாமல் இருக்கும் என்பதனை நம்பும் மக்கள் நடத்தும் யுத்தம். அந்த உத்தமர் காந்தி மகான் நடத்தும் யுத்தம்.



இதனை நம்பிச் சேருங்கள் என்று அரை கூவல் விடுக்கும்  பாடல்.

இராமலிங்கம் பிள்ளையின் பலப்பல பாடல்களுள், என்னைக் கவர்ந்த மிக அழகிய பாடல் இது.

Sunday, February 6, 2011

Yaathum Oore, Yaavarum kELir" : Kaniyan Poongunranaar

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" : கணியன் பூங்குன்றனார்

இந்த ஒரு வார்த்தை சொல்ல என்ன ஒரு மனித நேயம் வேண்டும்! அனைத்து உலகும் எனது உறவு. அனைத்து மக்களும் எனது உறவு. எந்த ஊரும் எனது ஊரே என்பது எவ்வளவு உயர்ந்த சிந்தனை!

இந்த மாதிரி ஒரு சிந்தனை, வார்த்தை, சொல் வர வேண்டும் என்றால், அந்த மனிதர், அந்த புலவர், எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்! அவர் வாழ்ந்த சூழலும், சுற்றமும், ஊரும், நாடும், எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!

எனக்கென்று ஒரு எல்லை என்பது இல்லை என்று சொல்வதற்கு, மிகப் பெரிய சிந்தனை, மிகப் பரந்த மனப்பாங்கு வேண்டும். 'எனது நாடு, எனது ஊர், எனது வீடு' என்று இருப்பார் மத்தியில், 'எல்லாரும் என் உறவினரே' என்று சொல்வது மிகப் பெரிய மாற்றம் அல்லவா!

'எல்லோரும் என் உறவு' என்று சொல்லும்போது, என்னிடம் இருப்பதை, அனைவரிடமும் பகிர்ந்து அளிப்பதற்கும், அவர்கள் அளிப்பதை மகிழ்ச்சியோடு ஏற்கவும் மனம் வேண்டும். 

இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என் மாநிலம், என் மாவட்டம், என் வட்டம் என்று ஒரு சிறிய குறுகிய எல்லைக்குள் நம்மை நாமே கட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

'இது எனது, இதுமட்டுமே எனது, உனது எனக்கு வேண்டாம்' என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பதே, எனக்குத் தெரிந்து, முதன் முதலில் 'globalization' பற்றி வந்த சிந்தனை. அந்த சிந்தனையின் 'logical end' தான், இப்போது நாம் பார்க்கும் 'globalization'.  

வர்த்தக எண்ணத்தில் மட்டுமல்லாது, மனித நேயத்தின் அடிப்படையிலும், நமது சிந்தனையில், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற சிந்தனை மலரட்டும்.


Saturday, January 29, 2011

Tahmizhukkum AmuthenRu pEr : தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

என்ன ஒரு பாடல் இது!

பாரதிதாசன் பாடிய பாடல் இது. சுசீலாவின் இனிய குரலாலே மிகப் பிரபலமான இந்தப் பாடல், மிக அழகாகத் தமிழின் பெருமையை, இனிமையை விளக்குகின்றது. அவரது இன்ன பிற பாடல்களையும் காண, இங்கு நோக்கவும் : http://www.puducherry.com/bharathidasan/




இந்த ஏட்டின் பெயரே கூட, இந்தப் பாடலிலிருந்து பிறந்ததுதான். "தமிழ்", "தமிழ்" என்று சொல்லிக்கொண்டே இருந்தால், "அமிழ்து" "அமிழ்து" என்றுதான் கேட்கும். 


மிக நிச்சயமாக, தமிழ் மொழிபோல், இனிதாவதெங்கும் காணோம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை கவிதைகள். எந்தனை அழகிய பாடல்கள். எத்தனைக் கதைகள். எத்தனை நாடகங்கள். எவ்வளவு அழகான மொழி. 


கம்பனும், பாரதியும், அவனது தாசனும், இளங்கோவும், இன்ன பிற கவிஞர்களும், கதாசிரியர்களும் வந்து, இந்த மொழியிலே காவியங்களும், காப்பியங்களும் செய்து நமக்கு பேருதவி புரிந்து இருக்கிறார்கள். 


என்ன இல்லை இந்த மொழியிலே! வாழ தமிழ் மொழி. வாழிய எம் தமிழ் நாடு.



Friday, January 14, 2011

akkinik kunjonru kanden : Barathi

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்.
 அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்திடை வைத்தேன்
 வெந்து தணிந்ததக் காடு,
 தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
 தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!"



என்ன ஒரு பாட்டு! நெருப்பிலே, சிறு நெருப்பு - பெரு நெருப்பு என்றெல்லாம் வித்தியாசம் உண்டோ? இல்லை. நெருப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், எரிக்கும் சக்தி எல்லாம் ஒன்றுதான். இதைத்தான், "மூர்த்தி சிறிதாயினும், கீர்த்தி பெரிது" என்று சொல்வார்கள்.

பாரதியின் இந்த "புதுக் கவிதை" என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. இதை எந்தத் தருணத்தில் பாரதி பாடினான் என்று தெரியவில்லை. எதைச சொல்ல, இந்தப் பாடல் என்று தெரியாவிட்டாலும், எந்த ஒரு பெரும் சக்தி பற்றியும் இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆன்மீக சக்தியாக இருக்கட்டும். ஜன சக்தியாக இருக்கட்டும். சிறு பொறியாகக் கிளம்பினாலும், பெரும் சக்தியாக உருமாரி, தீமைகளைப் பொசுக்கும் வல்லமையோடு வெளிவருகின்றது. மகாபலிச் சக்கரவர்த்தியை அழிக்க வந்த வாமனனாயிருக்கட்டும்.


இடுப்பில் ஒரு அரை முழம் வேட்டியுடன் ஆங்கில சாம்ராஜ்ஜியத்தையே எதிர்த்துப் போராடிய காந்திஜியாயிருக்கட்டும்.



மகா பலியால், "இவன் சிறுவன்" என்று நினைத்து விட முடியவில்லை. சர்ச்சிலால், "இவர் நாகரீகமாய் உடுக்கக் கூடத் தெரியாத கோவணாண்டி" என்று விட்டுவிட முடியவில்லை. பெரும் சக்தியாய் மாறி, எதிர்த்தவர்களை அழித்துத்தான் விட்டது.

ஏன், இரண்டு வரிகளில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் குரள் சொல்லிவிடவில்லையா என்ன!



இந்தப் பாடலில், பொருள் பொதிந்த அத்தனை வரிகளையும் விடவும், எனக்கு மிகவும் பிடித்தது, இந்த  "தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!" தான்! என்ன ஒரு சந்தம்! என்ன ஒரு நயம்! என்ன ஒரு அழகு! அந்த சிறு நெருப்பு, அந்தத் தழல், அந்தப் பொந்திடை இருந்து புறப்பட்டு, "தத்தரிகிடத் தத்தரிகிடத் தித்தோம்!" என்று நடனமிட்டு,  இருள் சூழ்ந்த அந்தக் காட்டினை முழுக்க எரிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றதே!

Saturday, January 8, 2011

Kamban : "Ulagam Yavaiyum" : "உலகம் யாவையும்"

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 
 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
 அன்னவர்க்கே சரண் நாங்களே"

கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம் சொல்லப் புகுந்த காவியத்திலே, முதல் பாடலிலே, கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கும் அந்தப் பாடலிலே, கடவுள் பெயரே இல்லை!


இது போன்று வேறு எந்தக் காவியத்திலும் வந்ததாகத் தெரியவில்லை. எல்லாக் காவியங்களிலும், முதலிலே, ஒரு விநாயகர் துதி இருக்கும். இல்லையென்றால், அந்த நூல் பாடப்பெறும் தெய்வத்தின் பாடல் இருக்கும். ஆனால், இங்கே, இரண்டும் இல்லை. "இந்த உலகத்தினைப் படைத்தும், காத்தும், அழித்தும், இப்படி விளையாட்டாய் அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் அந்த ஒருவரே, எங்கள் தலைவர். அவரது தாளினைகளையே,  நாங்கள் சரணடைகிறோம்" என்று தொடங்குகிறான் கம்பநாடன்.

எந்த ஒரு மதத்தினைச் சார்ந்தவரும், தங்களது தெய்வமே, படைப்பு, காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் புரிகின்றது என்று நினைப்பர். கம்பநாடன், எந்த ஒரு மதத்தினருக்கும் இணங்க, எந்த ஒரு தெய்வத்திற்கும் ஏற்றவாறு, இந்த காவியத்தினை ஆக்க வந்தானோ? அதனால்தான், எந்த தெய்வத்தினையும் சாராமல், அதே சமயம், எல்லா தெய்வத்திற்கும் பொருந்தும் விதத்தில், இந்தப் பாடல் படைத்தானோ?

என்ன  அழகு இந்தப் பாடல்! தமிழ் எனும் அமிழ்து அருந்தத் தொடங்கும் பாடலே, அமிழ்தினும் இனிய பாடலை அமைந்தது அந்த எல்லாமாய் நின்று, அலகிலா விளையாட்டாய் அனைத்தையும் நடத்தி வரும் அந்த தெய்வத்தின் அருளேயன்றி, வேறொன்றும் இல்லை!