Search This Blog

Showing posts with label Kamban. Show all posts
Showing posts with label Kamban. Show all posts

Saturday, January 8, 2011

Kamban : "Ulagam Yavaiyum" : "உலகம் யாவையும்"

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 
 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
 அன்னவர்க்கே சரண் நாங்களே"

கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம் சொல்லப் புகுந்த காவியத்திலே, முதல் பாடலிலே, கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கும் அந்தப் பாடலிலே, கடவுள் பெயரே இல்லை!


இது போன்று வேறு எந்தக் காவியத்திலும் வந்ததாகத் தெரியவில்லை. எல்லாக் காவியங்களிலும், முதலிலே, ஒரு விநாயகர் துதி இருக்கும். இல்லையென்றால், அந்த நூல் பாடப்பெறும் தெய்வத்தின் பாடல் இருக்கும். ஆனால், இங்கே, இரண்டும் இல்லை. "இந்த உலகத்தினைப் படைத்தும், காத்தும், அழித்தும், இப்படி விளையாட்டாய் அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் அந்த ஒருவரே, எங்கள் தலைவர். அவரது தாளினைகளையே,  நாங்கள் சரணடைகிறோம்" என்று தொடங்குகிறான் கம்பநாடன்.

எந்த ஒரு மதத்தினைச் சார்ந்தவரும், தங்களது தெய்வமே, படைப்பு, காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் புரிகின்றது என்று நினைப்பர். கம்பநாடன், எந்த ஒரு மதத்தினருக்கும் இணங்க, எந்த ஒரு தெய்வத்திற்கும் ஏற்றவாறு, இந்த காவியத்தினை ஆக்க வந்தானோ? அதனால்தான், எந்த தெய்வத்தினையும் சாராமல், அதே சமயம், எல்லா தெய்வத்திற்கும் பொருந்தும் விதத்தில், இந்தப் பாடல் படைத்தானோ?

என்ன  அழகு இந்தப் பாடல்! தமிழ் எனும் அமிழ்து அருந்தத் தொடங்கும் பாடலே, அமிழ்தினும் இனிய பாடலை அமைந்தது அந்த எல்லாமாய் நின்று, அலகிலா விளையாட்டாய் அனைத்தையும் நடத்தி வரும் அந்த தெய்வத்தின் அருளேயன்றி, வேறொன்றும் இல்லை!