நரசிம்மாவதாரம்....
------------------------
அல்லில் பகலில் அகத்துள் அதன்வெளியில்
புல்புழு பூச்சி பறவையால் -கொல்லும்
மனிதனால் காட்டு மிருகத்தால் சாகா
தனதுயிர் கேட்டுத் தவம்....(1)
இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
தோன்றினன் நாரணத் தொண்டு....(2)
''நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
பாரா யணம்செய் பிரகலாதா'' -பூரண
கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
நற்கதியை நாரதன் நன்கு....(3)
’’அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
மறையென நின்றான் மகன்....(4)
முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
கூட்டியவன் பக்தனுக்கு காப்பு....(5)
பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
சூரியன்மேல் வைப்பாரோ சூடு !....(6)
விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
பேரலை போலெழுந்தான் பிஞ்சு....(7)
கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
நாவின்தன் மென்மையாய் நைந்தது -சாவிந்த
பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
நொள்ளையான ஆட்கள் நமுத்து....(8)
ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
நாரண சக்திக்கு பூரண பக்தியே
காரணம் என்றான் கொழுந்து....(9)
காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
கூடத்து தூணுக்கே கை....(10)
பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
வேகமாய் வைகுண்டம் விட்டு....(11)
கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
காதுசிகை கோதி குதிப்பு....(12)
சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
கரநுனியால் கீறிக் கிழிப்பு....(13)
ஆவேச மான அரியை அடக்கிட
பூவாசத் தாயே பயந்திட -சாவாச
மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
தேகம் தழுவத் தணிவு....(14)
கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
மெலிந்துகர் ஜிக்க மியாவ்....(15)
ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
களைத்தல் கதையின் கருத்து....(16
எனது வாழ்த்துரை:
நரசிம்மன் கதை சொன்ன மோகனே நீரிங்கே
வரசிம்மன் அருள்பெற்று வளம் பெற்று வசனத்தில்
பெருசிம்மம் யாவரிலும் பேரொளியாய்த் திகழத் தவம்
தருசிம்மம் பெரியவாளின் பதம்வணங்கி வேண்டுகிறேன்!